6 பிப்., 2015

மார்ச்-8-ஆம் தேதி நடைபெறும் ஜாக்டோ ஆசிரியர் கூட்டமைப்புப் பேரணியில் தமிழகத் தமிழாசிரியர் கழகம் பங்கேற்பு

கோரிக்கைகள்:
1) 6ஆவது ஊதியக்குழுவில், மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், தமிழக அரசின் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இப்பிரிவினர் அனைவருக்கும் தமிழக அரசு வழங்கிட வேண்டும்.

2) 6ஆவது ஊதியக்குழுவில், மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ள அனைத்துப்படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

3) அகவிலைப்படி 100 விழுக்காடு அளவைக் கடந்துவிட்டதால், 50 விழுக்காடு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்கவேண்டும்.

4) 2011 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை காலத்தில் வாக்குறுதி அளித்ததற்கு ஏற்ப, தமிழக அரசு தன் பங்கேற்பு (CPS) ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.



5) ஒப்பந்த அடிப்படை (1986-1988) மற்றும் தொகுப்பூதியத்தில் (2004-2006) நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, நியமன நாளில் இருந்து பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் வேண்டும்

6) பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேரப் பணிக்காலத்தில் பணிபுரிந்த தொழிற்கல்வி ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் 50 விழுக்காடு பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.

7) தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணியில், தற்போது சமூக விரோதிகளின் தலையீடும், ஆசிரியர் பணிக்கு பாதுகாப்பின்மையும் சமீபகாலமாக தொடர் நிகழ்வாகி வருகிறது.  அதனால் பள்ளிகளில் மனநிறைவுடன் கற்றல், கற்பித்தல் பணியில் ஈடுபட முடியாமலும், மன உளைச்சலுடன் பணியாற்றும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.  எனவே முழுமையான பாதுகாப்பு மற்றும் மனநிறைவுடன் பணியாற்றும் சூழ்நிலையைப் பள்ளிகளில் ஏற்படுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

8) தாய்மொழி தமிழ்ப் பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண் 266 யைத் திருத்தம் செய்து தமிழ்ப் பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும்

9) அரசு உதவிபெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே நிலையில் பணிபுரிந்தவர்களுக்கு 6 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி-22-ஆம் தேதி மாவட்ட அளவில் நடைபெறும் பேரணி குறித்த ஆயத்தக் கூட்டங்களில் கலந்துகொள்வது என்றும், மார்ச்-8-இல் நடைபெறும் பேரணியில் கலந்துகொள்வது என்றும் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் இளங்கோ அறிவித்துள்ளார்.