19 பிப்., 2015

உலகத் தாய்மொழி நாள்: பிப்ரவரி 21

மனிதனுக்குக் கிடைத்த வரம்
உலகத் தாய்மொழி நாள்: பிப்ரவரி 21
நமது அன்றாட வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதவற்றில் ஒன்று மொழி. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஏதோ ஒரு வகையில் மொழி உள்ளது. பேச்சு, எழுத்து, குரல் வழியாக (வானொலி),......................
காட்சியுடனான எழுத்து வழியாக (காணொளி) எனப் பல வகைகளில் மொழி உள்ளது.
மொழி இருப்பதால்தான், எல்லா விஷயங்களையும் அடையாளப்படுத்தி, புரிந்துகொள்ள முடிகிறது இல்லையா? மனிதனுக்கும் குரங்குகளுக்கும் இடையிலான அறிவு வளர்ச்சி இடைவெளிக்கு மொழியே காரணம் என்கிறார் குரங்கு ஆராய்ச்சியாளர் ஜேன் குடால்.
மொழியின் வழியாக அனுபவங்களும் வரலாறும் காலங்காலமாக நினைவுகூரப்படுவதே முக்கியக் காரணம். அதிலும் நமது தாய்மொழியே அறிவு வளர்ச்சிக்கு முழு முதற் காரணமாக இருக்கிறது.
பிப்ரவரி 21-ம் தேதியை உலகத் தாய்மொழி நாளாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. அதையொட்டி உலக மொழிகளைப் பற்றிச் சில சுவாரசியமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோமா?
# எஸ்பிரான்டோ என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி. இதை 5 லட்சம் பேர் முதல் 20 லட்சம் பேர்வரை பேசுகிறார்கள். இந்த மொழியில் 2 திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
# அமெரிக்க நாட்டில் ஆட்சி மொழி கிடையாது. ஆனால், ஆங்கிலத்தில்தான் கிட்டத்தட்ட எல்லாத் தகவல் பரிமாற்றங்களும் நடைபெறுகின்றன.
# ஐ.நா. சபையின் அதிகாரப்பூர்வ மொழிகள் 6.
# கிறிஸ்தவப் புனித நூலான பைபிள் 2,454 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
# உலகில் 2,400 மொழிகள் அழியும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
# சராசரியாக ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு மொழி அழிந்துபோவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
# கிழக்கு சைபீரியா, வட அமெரிக்காவின் வடமேற்கு பசிபிக் பகுதி, வடக்கு ஆஸ்திரேலிய பகுதிகள் அழியும் தறுவாயில் உள்ள பல மொழிகளைக் கொண்டுள்ளன.
# 231 மொழிகள் ஏற்கெனவே முற்றிலும் அழிந்து போய்விட்டன.
# ஒரு கணக்குப்படி சராசரியாக ஒரு நாளைக்கு 4,800 வார்த்தைகளை ஒவ்வொருவரும் பேசுகிறோம்.
# ஆப்பிரிக்க நாடுகளிலேயே சோமாலியாவில் மட்டும்தான், நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசுகின்றனர். அது சோமாலி மொழி.
# ஆசிய கண்டத்தில் மட்டும் 2,200 மொழிகள் இருக்கின்றன.
# சீன மொழியான மாண்டரினில் 50,000 எழுத்துகள் உள்ளன. எல்லாம் சித்திர எழுத்துகள். ஒரு நாளிதழைப் படித்துச் செய்தியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்கூட 2,000 எழுத்துகள் தெரிந்திருக்க வேண்டும்.
# உலகில் 2,700 மொழிகளும், 7,000 வட்டார வழக்குகளும் இருக்கின்றன. வட்டார வழக்கு என்பது குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் ஒரு மொழியின் துணைப் பிரிவு என்று சொல்லலாம்.
அந்தப் பகுதிக்கெனத் தனிச் சொற்கள், உச்சரிப்புடன் அது அமைந்து இருக்கும். (உதாரணத்துக்குச் சென்னை, நெல்லை, கோவையில் பேசும் வேறுபட்ட தமிழைப் போல)
# உலகின் முதல் எழுத்து மொழி கி.மு. 4500-ல் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.
# இந்தியாவில் நான்கு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த மொழிகள் பேசப்படுகின்றன. இந்தோ-ஐரோப்பிய, திராவிட, ஆஸ்திர-ஆசியா (அசாம், வடகிழக்கு இனக் குழுக்கள்), சினோ-திபெத்திய (வட இமாலய, மியான்மர் எல்லைப்புறப் பகுதிகள்) மொழிக் குடும்பங்களே அவை.
தென்னிந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. திராவிட மொழிக் குடும்பத்தின் தாய், தமிழ். இந்தியாவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம் 33 மொழிகளும், 2000 வட்டார வழக்குகளும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
# உலகில் 12.44 சதவீதம் பேருக்கு சீனாவின் மாண்டரின் மொழியே தாய்மொழி. சீன மக்கள்தொகை அதிகம் என்பதும்கூட, இதற்கு ஒரு காரணம்.
# ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.
# தென்னாப்பிரிக்காவின் ஆட்சி மொழிகள் 11. உலகில் அதிக அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ள நாடு இது.