20 பிப்., 2015

தேர்வுப் பணிகளில் துறை அலுவலர் பொறுப்பிலுள்ள மொழிப்பாட ஆசிரியர்களை நீக்க நடவடிக்கை

மொழிப்பாட ஆசிரியர்கள் நீக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன்
மதுரை: பிளஸ் 2 தேர்வுப் பணிகளில் துறை அலுவலர் பொறுப்பு வகிக்கும் மொழிப்பாட ஆசிரியர்களை நீக்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மார்ச் 5ல் பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. முதன்மை கண்காணிப்பாளர் பணிக்கு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், துறை அலுவலர் பொறுப்புக்கு மூத்த முதுநிலை ஆசிரியர்கள், அறைக் கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படை குழுவிற்கு முதுநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்பட்டு, அவர்களின் விவரங்கள் மாவட்டம் வாரியாக தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவற்றில் துறை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ், ஆங்கில பாட மூத்த ஆசிரியர்கள் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதில் மாற்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய பட்டியலை தேர்வுத் துறை கோரியுள்ளது.
மொழிப்பாட ஆசிரியர்கள் நீக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் கூறியதாவது: மொழிப் பாட தேர்வுகள் முடிந்த உடன், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்துவதற்காக தேர்வுப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காரணம் கூறுகின்றனர்.
இந்த நீக்கத்தால் நாங்கள் தகுதி இல்லாதவர் என முத்திரை குத்தப்படுவோம். விடைத்தாள் பணிக்கு மூத்த மொழிப்பாட ஆசிரியர் தேவையென்றால், அவர்களை தவிர பிற மொழிப்பாட ஆசிரியர்களை தேர்வுப் பணியில் ஈடுபடுத்தலாம். தேர்வுத்துறை இந்த நடவடிக்கையை பரிசீலிக்க வேண்டும், என்றார்.
நன்றி தினமலர் இமலர் கல்விமலர்
பிப்ரவரி 18,2015,11:59 IST