20 மார்., 2015

ஆசிரியர் இடமாறுதலில் லஞ்சம், முறைகேடு: அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

மார்ச் 17,2015,11:53 IST

மதுரை: அரசியல்வாதிகள் தலையீட்டால் ஆசிரியர் இடமாறுதலில் லஞ்சம், முறைகேடு நிலவுவதாகவும், சி.பி.ஐ., விசாரணை கோரியும் தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி லினட் அமலா சாந்த குமாரி தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2007ல் பட்டதாரி ஆசிரியராக .......
நியமிக்கப்பட்டேன். திருவாரூர் திருநெல்லிக்காவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பணிபுரிகிறேன். எனக்கு எம்.பில்., கூடுதல் கல்வித் தகுதி உள்ளதால் மேல்நிலை பள்ளிகளில் கற்பிக்க முடியும்.
என்னைவிட குறைந்த கல்வித் தகுதி உள்ளவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்நிலை அல்லது மேல்நிலை பள்ளிக்கு இடமாறுதல் கோரி கல்வி அதிகாரிகளிடம் விண்ணப்பித்தேன். அவர்கள் துவக்கக் கல்வி இயக்குனரிடம் தடையில்லாச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றனர்.
விதிகள்படி அதில் எனக்கு விலக்களித்து இடமாறுதல் வழங்க கோரினேன். 2014ல் இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்தேன். பொது மாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க துவக்கக் கல்வி இயக்குனர் தரப்பில் 2014 நவ.,25 ல் அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிட நிலவர விபரங்கள் அரசியல்வாதிகளின் செல்வாக்கால் மறைக்கப்படுகின்றன.
காலிப் பணியிடங்கள் பற்றி வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம், பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டால் உண்மைகளை மறைப்பது தவிர்க்கப்படும். மாநிலத்தில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு காலியாக உள்ளன? என்பதை கல்வித்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். அதை இணையதளம், பத்திரிகைகளில் அறிவிப்பாக வெளியிட வேண்டும்.
இதன் அடிப்படையில் நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும். சட்டவிரோத நியமனங்கள், இடமாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். அரசியல்வாதிகளின் தலையீட்டால் இடமாறுதலில் லஞ்சம், முறைகேடு நிலவுகிறது. இதை வெளிக்கொணர சி.பி.ஐ.,விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிடலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் 2015-16 கல்வியாண்டில் ஓய்வு, பதவி உயர்வு, பள்ளிகளின் தரம் உயர்வால் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனுதாரரின் வழக்கறிஞர் எஸ்தவ் ஆண்டனி அசோக் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், துவக்கக் கல்வி இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.