23 டிச., 2020

எங்கள் குறளும் உங்கள் மனுவும் எப்படிச் சமமாகும்?

 

எங்கள் குறளும் உங்கள் மனுவும் எப்படிச்  சமமாகும்?                    

--நா.முத்துநிலவன்

தமிழகத் தமிழாசிரியர் கழக மேனாள்  மாவட்டச் செயலர் புதுக்கோட்டை

இந்துத்துவக் கருத்துகளை மறைமுகமாகத் திணித்துவந்த தினமணி தமிழ் நாளிதழின் ஆசிரியர் திரு வைத்தியநாதன், பாஜக ஆட்சி வந்தபிறகு நேரடியாகவே திணிக்கத் தொடங்கியது நாடறிந்ததே! ஆர்.எஸ்.எஸ். போற்றும்மனு()தர்மகருத்துகளைத் தினமணியில் பிரச்சாரமும் செய்துவந்தது. வெகு அண்மைக் காலமாக தினமணியில் வெளிவந்த பல கட்டுரைகளின் பட்டியலைப் பார்த்தாலே இது புரியும்!

பலகாலமாகத் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும், முற்போக்கு இயக்கத் தோழர்களும் சொல்லிவந்த கருத்தேமனுநூல் ஒரு மக்கள் விரோத நூல்என்பது. ஆனால், இதையே அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் பேசியதோடு, மனு (அ)தர்மநூலைத் தடைசெய்ய வேண்டும் என்றும் பேசி, அதற்கான இயக்கத்தை முன்னெடுத்தார். உடனே, திருமா மீது வழக்குப்போட்டார்கள், வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. வாய்மையும் சிலநேரம் வெல்லுமல்லவா?    

ஆனால், மனுதர்மத்தின் அதர்மக் கருத்துகளுக்கு ஃபீஸ் வாங்காத வக்கீலான தினமணி ஆசிரியர் சும்மா இருப்பாரா? சுடச்சுடக் கட்டுரைகளை வெளியிட்டு “மனுப்போட்டு வந்தார்! மக்கள்தான் கண்டுகொள்ள வில்லை! என்னதான் செய்வார் திரு.வைத்தியநாதன்? பாஜகவின் ஆதரவுக் கருத்துகளையே எவ்வளவுதான் வெளியிட்டாலும் தினமணியின் விற்பனை குறைந்து கொண்டே போவதைத் தடுக்க முடியவில்லை! எனவே ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்தால் விற்பனை கூடலாம் என்னும் வியாபரத் தந்திரமாகவும் இருக்கலாம்! இந்தப் பழைய தந்திரங்களைத் தமிழர்கள் அண்மைக் காலமாக நிறையப் பார்த்ததால் இனி ஏமாறத் தயாரில்லை என்பது அவருக்கு புரியவில்லை!

மனுஸ்மிருதியில் பெண்கள்என, கோதை ஜோதிலட்சுமி எழுதிய கட்டுரையை தினமணி -04-11-2020அன்று- வெளியிட்டு, “மனு பெண்களை இழிவு செய்யவில்லை, மாறாகப் பெருமைப்படுத்தியே இருக்கிறது என்று வலிந்து சொல்லிப் பார்த்தது தினமணி. இதற்கெல்லாம் தந்தை பெரியார் ஐம்பது ஆண்டுக்கு முன்பே விளக்கம் தந்துவிட்டார் என்பதை தமிழகம் அறியும் நாமும் அறிவோம் என்பதால் மௌனம் காத்திருந்தோம். ஆனால், இவ்வளவு சொல்லியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என்று நினைத்தோ என்னவோ, தமிழர் போற்றும் திருக்குறளை இழிவு செய்தால் ஒருவேளை தமிழர்கள் தினமணியைக் கவனிப்பார்கள்  என்று மீண்டும் ஒரு கட்டுரையை, “மநுவுக்கு ஏன்இந்த எதிர்மனுஎனும் தலைப்பில்ஆர்.நடராஜன்- 20-11-2020- அன்று வெளியிட்டது தினமணி. அதையும் யாரும் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, பெரிய எழுத்தில் வெளியிட்டதை மட்டும் இங்குத் தருகிறேன்-  மனு பெண்களைப் பற்றிச் சொல்வதையேதான் திருவள்ளுவரும் சொல்லி யிருக்கிறார், மநுதர்ம சாஸ்திரம் தடை செய்யப்பட வேண்டுமானால், அதே காரணத்திற்காகத் திருக்குறளும் தடைசெய்யப்பட வேண்டியதே 

 இது சரிதானா திரு.வைத்தியநாதன் அவர்களே? “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற  எங்கள் குறளும்,  நால்வர்ணமும் அதன் வேறுபாடுகளுமே தர்மம்என்ற  உங்கள் மனுவும் எப்படிச் சம்மாகும்?

பிறப்பால் மனிதர் அனைவரும் சமம் அல்லவா?

பொதுவாகவே எல்லா மனிதர்க்குமான அறம்கூறும் நூல் என்பதால்உலகப் பொது மறைஎன்று குறளைப் போற்றிவருகிறது குவலயம்! அதுகூடப் பொருளற்ற புகழ்ச்சிதான். மறை என்றாலே ரகசியமாகச் சொல்லும் வேதம் என்று பொருள். அதனால், எல்லார்க்கும் பொதுவான அறநூல் எனும் பொருளில், “உலகப் பொதுமுறைஎன்பதே சரி எனும் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் இஆப., அவர்களின் கருத்தே பொருத்தமானது.

அன்றைய சாதியச் சமுதாயத்திலேயே, “ஆற்றிவுபடைத்த மனிதர்கள் மட்டுமல்ல, உலக உயிர்கள் அனைத்துமே சமம், ஏனெனில் ஓரறிவுத் தாவரம் முதல், ஐந்தறிவு விலங்குகள்வரை ஒவ்வொன்றும் ஒரு மதிப்பிற்குரியவையேஎனும் ஆழ்ந்த பொருளில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (குறள்-972) என்றார் வள்ளுவர். இதற்கு நேர் எதிராக, “நான்கு வர்ணங்களையும் பிரம்மனே படைத்ததாகச் சொல்லும் மனுநீதி!, (அத்தியாயம்-1, சுலோகம்-31) பிரம்மா தனது முகத்திலிருந்து பிராமணர்,, தோளிலிருந்து சத்திரியர், தொடையிலிருந்து வைசியர், காலிலிருந்து சூத்திரர் ஆகியோரைப் படைக்கும்போதே ஏற்றத்தாழ்வுடன் படைத்தகதையைச் சொன்னது, இப்போதும் மனுநூலில் இருக்கிறதா இல்லையா? சாதிமீறி மதம்கடந்து நடக்கும் திருமணங்களை உங்கள் மனு ஏற்கவில்லை, எங்கள் அம்பேத்கார் இயற்றிய இந்திய அரசியல் சட்டம் ஏற்கிறதே! எனில் அரசியல் சட்டத்தை விட உங்கள் மனு மேலானதா? வள்ளுவரின் குறளில் காதல்மணம் இருக்கிறது, சாதிமதம் இல்லையே!                                                                                           எனில் எங்கள் குறளும் உங்கள் மனுவும் எப்படிச் சமமாகும்?

தண்டனையும் வேறு வேறா 

அறியாமல் தவறு செய்த தவறைப் பொறுத்தல் மனித மாண்பை வளர்க்கும் என்று உலகப் பேரறிஞர் பலரும் சொல்லியிருக்க, அதற்கும் மேலே போய், “அறியாமல் செய்தவர் அறியும் வழி, அவர்க்கு நன்மை செய்து விடுவதுதான்” என்று நல்லறம் சொன்னவர் வள்ளுவர் (குறள்-314) இதுதானே மனிதர்களப் பண்படுத்தும் உயர்நெறி? அதே வேளையில், “பயிர்களை நல்லபடியாக வளர்க்க வேண்டுமானால், பயிர் வளர்ச்சியைக் கெடுக்கும் களைகளை அழிப்பதும் அவசியம் என்பதுபோல, அறிந்தே கொலை செய்த கொடியவரை அவர் யாராக இருந்தாலும் தண்டிப்பதே அரச நீதி!” என்று எளிதில் புரியும் எடுத்துக் காட்டுடன் குறள் கூறும் (எண்-550).  ஆனால் இதற்கு  மாறாக, கொலை செய்தவனின் சாதிபார்த்துத்தான் தண்டனை தரவேண்டும் (மனு-அத்-8,சுலோ-379) என்பதா சமநீதி?!? அதாவது, கொலைகாரன் பிராமணனாக இருந்தால் அவன் தலைக் குடுமியைச் சிரைத்தாலே போதுமானது, மற்ற சாதியரானால், உயிரையே எடுத்துவிட வேண்டுமாம்  என்னங்கடா உங்க நியாயம்? இதுவா மனித தர்மம்? இதுவா பொதுநூல்? இதைத்தானேவள்ளுவர் செய் திருக்குறளை, மறுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதிஎன்று மனோன்மணியம் பெ. சுந்தரனார் தெளிவாகக் கேட்டார்?                                                                                                           எனில் எங்கள் குறளும் உங்கள் மனுவும் எப்படிச் சமமாகும்?

 

பெண் என்பவள் உயிர்ப்பிறவியா? போகப் பொருளா?           

ஒரு நாட்டின் முன்னேற்றம், அந்நாட்டுப் பெண்களின்  முன்னேற்ற அளவிலேயே அமையும் என்பார்கள். ஆனால், மனுநூலின் ஒவ்வொரு சுலோகத்திலும் பெண்ணடிமைத்தனம் வழிந்து ஆறாய்ப் பெருகுகிறதே! (12அத்தியாயம்,2671சுலோகம்) ஓரிடத்திலாவது பெண்ணும் ஒரு உயிர்தான் அவள் மனிதப்பிறவிதான், ஆணுக்குச் சமமான உரிமையுள்ளவள்தான் என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? இல்லையே! மாறாக, எல்லா இடங்களிலும் பெண்கள் ஆண்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும், எந்த வயதிலும் அவளுக்குச் சுதந்திரம் கிடையாது. ஆண்களால் காப்பாற்றப் படுவதற்காகவே பெண் சுயஅறிவின்றியே படைக்கப்பட்டாள் என்று எத்தனை எத்தனை வகைவகையான சுலோகங்கள்?

பாலியத்தில் தகப்பன் ஆஞ்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகளின் ஆஞ்ஞையிலும்  இருக்க வேண்டியதே யல்லாது, ஸ்த்ரீகள் தன் ஸ்வாதீனமாக ஒருபோதும் இருக்க்க் கூடாது (அத்-5, சுலோ-148) எனும் இந்த வரிகள் அப்படியே ஓர் எழுத்தும் மாறாமல், “மநுதரும ஸாஸ்த்திரம்எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. “திருவந்திபுரம் கோமாண்டுர் இளையவில்லி, இராமாநுஜாச்சாரிஎன்பவர் எழுதிய உரையோடு, 1865ஆம் வருடம் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட நூலில் உள்ளது. (இதன் பிடிஎஃப் கோப்பு வடிவம் இப்போதும் கணினி இணையத்தில் கிடைக்கிறது)

குறிப்பிடப்பட்ட இந்த ஒரு ஸ்லோகம் போதும், மற்றவற்றை எழுதினால் பெரியதொரு நூலாக விரியும் என்பதால் இத்தோடு விடுகிறேன்.

ஆனால் நாம் ஏற்கும் திருக்குறளோ, பெண்வழிச்சேறல் என்னும் ஒரு அதிகாரத்தை இல்லறவியலில் அல்ல, பொருட்பாலில்-அரசியல் பகுதியில் கொண்டுள்ளது. இதன் நுட்பம் யோசித்தால் விளங்கும். மற்றபடி, பழந்தமிழில் கிடந்த பரத்தை வகைகளைக் கண்டித்தவர் வள்ளுவர் என்பதும், “பெண்ணிற் பெருந்தக்க யாவுளஎன்பதும்தான் குறளின் பெருமை! “பிறனில் விழையாமைஎன்றொரு அதிகாரமும் இன்றும் பெண்களைப் பெருமைப் படுத்துவதே. மாறாக மனுவின் பெண்களைப் பற்றிய பார்வை, “ஆண்களுக்கான போகப் பொருளாகபெண்களைப் படைத்திருப்பதாகவே உள்ளது. சற்றொப்ப மனுவைப்போலவேபகவான் கிருஷ்ணன்அருளியபகவத் கீதைநூலிலும் இவ்வாறேசூத்திரர் போல வைசியர் போல, பெண்ணும் பாவ யோனியிலிருந்து வந்தவள்என்றே உள்ளது (பகவத்கீதை அத்தியாயம்-9, சுலோகம்-32) ரெண்டும் ரெண்டாப்பை! ரெண்டும் கழண்டாப்பை என்று நம் கிராமத்துப் பழமொழி சரிதானே?                                 எனில், எங்கள் குறளும் உங்கள் மனுவும் எப்படிச் சமமாகும்?

முப்பொருளா நாற்பொருளா?

பொதுவாகவே, திருக்குறள் வடமொழியின் நான்கு வேதங்களைப் பின்பற்றி எழுதப்பட்டதானகட்டுக்கதைநிறையவே உண்டு, எல்லாம் அவர்கள் புனைந்தவைதான். இதற்காகவே கி.பி.11ஆம் நூற்றாண்டில்திருவள்ளுவ மாலைஎன்றொரு நூலைத் தொகுத்தார்கள். இதில் பலப்பலப் பாடல்கள்நான்மறையைத் தமிழில் தந்தஎன்பதான தொடர்கள் வரும்! இந்நூலின் முதற்பாடல் அசரீரி, இரண்டாம் பாடல் கலைமகள் எழுதியது போலும் கற்பனைகளே போதும் இந்நூலைப் புனைந்தவர் நோக்கம் புரியும். அதை உதாரணம் வேறு காட்டுவார்கள். அதற்காகவே கட்டப்பட்ட கதைகள் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

ஆனால்அறம்பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனேஎன்னும் பிற்கால நன்னூலின் கருத்து வள்ளுவரின் கருத்தல்ல! வள்ளுவர்இன்பமும் பொருளும் அறனும் என்றாங்குஎனவும், “அறமுதலாகிய மும்  முதற்பொருள்எனும் தொல்காப்பியத் தமிழியத்தைப் பின்பற்றி முப்பால் வகுத்தவர்! எனவே மனுவைப் போல வேத வழிப்பட்டதல்ல குறள், தமிழ் மரபை ஒட்டி, வீடுபேற்றை வெட்டி வாழ்வியலை மட்டுமே பாடினார்!

நட்பு முரணும் பகை முரணும்

          திருக்குறளிலும் இன்றைய பகுத்தறிவுக் கருத்துகளுக்கு ஒவ்வாத சில முரண்பாடுகளும் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவை நட்பு முரண் வகை சார்ந்தவை. “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவுஎன்று சொன்னதுதான் கருத்துப் போரின் ஜனநாயகத்தைப் புரிந்துகொண்ட அறிவுக்கூற்று. இதை பெரியாரும், “நான் சொல்கிறேன் என்பதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டாம், உன் பகுத்தறிவைப் பயன்படுத்தி நன்றாக யோசித்து உண்மை அறிந்துகொண்டால் போதும்என்றே சொல்லிவந்தார். ஆனால் இந்த ஜனநாயக கருத்துகள் எதற்கும் ஒவ்வாத மனு, இறைவன் படைத்தான் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். இது எப்படிச் சரியாகும்? இதுதான் பகைமுரண். நட்பு முரணைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பகைமுரணைப் போராடித் தான் வெல்ல முடியும். நாம் வெல்வோம். மக்கள் வெல்வார்கள்.

          சாதி மத அழுத்தமே நமது முன்னேற்றத்திற்குப் பெருந்தடை என்பதால்தானே நமது அறிவுசார் நல்லுலகோர், அதை எதிர்த்துச் சமர் புரிந்தார்கள்? இப்போது, அந்தச் சாதி ஏற்றத் தாழ்வைக் காப்பாற்றத்தானே அதை வலியுறுத்தும் மனுவைத் தூக்கிக் கொண்டுவந்து எங்களையும் ஏற்கச் சொல்கிறீர்கள்? இந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டுதான் நான் இந்துவாகச் சாகவிரும்பவில்லை என்று பிரகடனப்படுத்திய அம்பேத்கார், “சாதி ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்துமதத்தால் யாருமே முன்னேற முடியாது, அந்த மதமே ஒரு அழிவு மதம்தான்என்று சொல்லித்தானே பத்து லட்சம் பேர்களுடன் இந்துமதத்தை விட்டொழித்து பவுத்த மதத்தைத் தழுவினார்? (15-10-1956, நாக்பூரில் அம்பேத்கர் உரை)

 

தினமணியின் குறளை இழிவுபடுத்தும் இப்போக்கை, வன்மையாகக் கண்டித்து,  தமிழ்நாடு  முற்போக்கு  எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  அறிக்கை வெளியிட்டது. தமிழ்நாட்டில் செயல்படும் ஏராளமான குறள் பரப்பும் அமைப்புகள் கண்டனக் கூட்டங்களை நடத்தின. பிரபல கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் எழுதிய நான்குவரிக் கண்டனத்தை அடுத்த சில நாள்களில் தினமணி வாசகர் கடிதம் பகுதியில் சிறிதாக வெளியிட்டு தினமணி அமைதி காத்தால் போதுமா? நடராஜன் கருத்து, சிற்பி கருத்து என்று இரண்டையும் வெளியிட்டால், தினமணியின் கருத்து என்ன என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டாமா? பிறகு  “பெண்ணின் பெருமை பேசும் திருக்குறள்” (தி.ராசகோபாலன்-05-12-2020) கட்டுரையை வெளியிட்டு விட்டால் திருக்குறளுக்கு தினமணி செய்த இழிவு சரியாகி விடுமா? “எங்கள் விருந்தோம்பலில் மலத்தையும் வைப்போம், பழத்தையும் வைப்போம், அது தின்போர் பாடுஎன்பது என்ன தமிழ் மரபு?

மனுவை ஏற்றிப் போற்றிச் சொல்லிக் கொள்வதும் அதை அவர்கள் பத்திரிகையில் வெளியிட்டுக் கொள்வதும் அவர்கள் விருப்பம். அதற்காக திருக்குறளை இழிவு செய்வதையும், “குறளும் மனுவும் ஒன்றேஎன்பதான கருத்துகளை வெளியிடுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். திருக்குறளை இழிவு படுத்திய தினமணி  தமிழ்கூறும் நல்லுகப் பெரியோரிடம் மன்னிப்புக் கேட்டு அறிக்கை வௌயிட வேண்டும்.

-----------------------------------------------------------------

கட்டுரை ஆசிரியர், அரசுப் பள்ளித் தமிழாசிரியராக 35 ஆண்டுகள் பணிபுரிந்து, ஓய்வுபெற்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மேனாள் புதுக்கோட்டை மாவட்டச் செயலர், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்.                 மின்னஞ்சல் <muthunilavanpdk@gmail.com> , செல்பேசி- 94431 93293

-------------------------------------------------------------------------------------

கட்டுரைக்கு உதவிய நூல்கள்

(1)   மனுநீதி- ஜாதிக்கொரு நீதி தந்தை பெரியார்,

(2)  கீதையின் மறுபக்கம் கி.வீரமணி

(3)  மனு தர்ம தந்திரம்… - விடுதலை இராசேந்திரன்,

(4)  பொசுங்கட்டும் மனுதர்மம் கலி பூங்குன்றன்

(5)  மநு அதர்மம் சுந்தம்பட்டி வெ.நாராயணசாமி

(6)  மனுதரும சாஸ்த்திரம்கோமாண்டுர் இராமாநுஜாச்சாரியார்(1865Pdf)

(7)  பகவத் கீதை உண்மையுருவில் பக்தி வேதாந்தசுவாமி பிரபுபாதர்

(8)  திருக்குறள்-பண்பாட்டுக் கையேடு-International Tamil Language Foundation US

(9)  ஈரடிப் போர் ஆயிஷா இரா.நடராசன்

(10)                மற்றும் தினமணி நாளிதழ்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------