17 பிப்., 2015

தேர்வைக் கண்காணிக்க 3 ஆண்டுகளாக ஒரே அலுவலர் - தனியார் பள்ளிகளில் என்னதான் நடக்கிறது?





சேலம்: பொதுத்தேர்வைக் கண்காணிப்பதில், சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு மட்டும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இணை இயக்குநர் பழனிச்சாமியை நியமித்திருப்பது, பல சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது.
அரசு தேர்வுத்துறை, பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்துவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், பொதுத் தேர்வைக் கண்காணிப்பதற்காக, மாவட்ட வாரியாக கல்வித்துறை அதிகாரிகளை நியமித்து, அதற்கான பட்டியலை, தேர்வுத்துறை வெளியிட்டது.
பட்டியல்
அதன்படி, தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் - சென்னை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குநர் அறிவொளி - காஞ்சிபுரம்,........
தொடக்கக் கல்வி இயக்குநர் இளங்கோவன் - திருவள்ளூர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ராமேஸ்வர முருகன் - விழுப்புரம், பள்ளிக் கல்வி இயக்குநர் - திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை கண்காணிப்பர் என அறிவிக்கப்பட்டது.
சந்தேகம்
பல இணை இயக்குநர்களும், பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலை) பழனிச்சாமி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை கண்காணிப்பார் என அறிவித்திருப்பதுதான், சர்ச்சையையும், சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கான கண்காணிப்பாளர் பொறுப்புக்கு, பழனிச்சாமி, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நியமிக்கப்பட்டு வருகிறார். இவரது நியமனத்திற்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நிர்வாக தரப்பில், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கண்காணிப்பு
தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம், மாநில அளவில் முதல், ரேங்க் பெறுவதால், இம்மாவட்டச் செயல்பாடுகளை, கண்டிப்புடன் கண்காணிப்பார் என கூறுகின்றனர். நாமக்கல் மீது, மாநில அளவிலான அதிகாரிகளுக்கே, பலவித சந்தேகங்கள் இருக்கும்போது, பழனிச்சாமியை மட்டும் தொடர்ந்து நியமிப்பது ஏன்?
கடந்தாண்டு, உமா என்ற இணை இயக்குநரை நியமித்துவிட்டு, பின், இவரை நியமித்தனர். வேறு இணை இயக்குநரையும் கூடுதலாக நியமித்தால்தான், நாமக்கல்லில் என்ன நடக்கிறது என்பது தெரியவரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இயக்குநருக்கு நேர்ந்த கதி
தேர்வின்போது, ஒத்துழைப்பு தராத அதிகாரிகளை, பெரிய பள்ளிகள் மதிப்பது கிடையாது. அதே நேரத்தில், ஒத்துழைப்பு வழங்கினால், ராஜ உபசாரம் நடக்கும். நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பது, அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
ஒத்துழைக்காத அதிகாரிகளுக்கு நேரும் சம்பவங்களில் ஒன்று: தேர்வுத் துறை இயக்குநராக பரமசிவன் இருந்தபோது, சென்னையில் உள்ள பிரபலமான மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு, நிருபர்களுடன் தேர்வைப் பார்க்க சென்றார். முதன்மைச் சாலையில் உள்ள கேட்டுக்கும், பள்ளியின் போர்டிகோவுக்கும் 200 அடி தொலைவு இருக்கும். இயக்குநர், மெயின் கேட் முன் வந்ததும், பள்ளி ஊழியர் உடனே கதவை திறக்கவில்லை.
நிர்வாகத்திடம் கேட்க வேண்டும் என கூறி, பள்ளிக்குள் சென்று 10 நிமிடங்கள் கழித்து வந்து கதவை திறந்தார். இதற்குள், என்னென்ன நடந்திருக்கும் என்பதை அனைவரும் அறியலாம். இதுபோன்ற பள்ளிகள்தான், டாப் பட்டியலில் உள்ளன; சீட் வாங்குவதற்கும், வசதி உள்ளவர்கள் முட்டி மோதுகின்றனர்.
நன்றி தினமலர் - இ மலர்