23 பிப்., 2015

1 முதல் 5ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களையும் கட்டாயமாக தமிழில் கற்க உத்தரவிட வேண்டும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை

logo
திங்கட்கிழமை, பிப்ரவரி 23, 2015
சிவகங்கை
1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களையும் கட்டாயமாக தமிழில் கற்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசிற்கு தமிழாசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை
மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாடவாரியாக...
தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இயக்குநர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியதாவது:–
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒரு பள்ளிக்கூடத்தில் 160 மாணவர்கள் படித்தால் 5 பட்டதாரி ஆசிரியர்களை பாடவாரியாக நியமிக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 30 மாணவர்கள் வரை கூடுதலாக இருந்தால் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை கூடுதலாக நியமிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பணியிடத்தை வழங்கும் போது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்ற அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வரவேற்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் பாடம் கடைசி நிலையில் உள்ளது. இதனால் ஒரு பள்ளிக்கூடத்தில் 300 மாணவர்கள் படித்தால் மட்டுமே கூடுதலாக ஒரு தமிழாசிரியரை நியமிக்க முடியும். உதாரணமாக ஒரு அரசு பள்ளியில் 290 மாணவர்கள் படித்தால் அங்கு ஒரு தமிழாசிரியர் மட்டுமே பணிபுரிய முடியும்.
தமிழில் கற்க உத்தரவு
இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழாசிரியர்கள் குறைவாக இருக்கும் நிலை ஏற்படும். இதனால் தாய்மொழி பாடத்தை மாணவர்கள் கற்பதில் குறை ஏற்படும். உலக நாடுகளில் அவரவர் தாய்மொழிகளில் கல்விமொழி இருந்து வருகிறது. கர்நாடாகவில் 1 முதல் 5ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களையும் கட்டாயமாக கன்னட மொழியில் படிக்க வேண்டும் என்று அந்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே போல் தமிழக அரசும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளில் அனைத்து பாடங்களையும் தமிழில் கற்க ஆணையிட வேண்டும். அத்துடன் தமிழாசிரியர் பணியிடத்தைக் கடைசி பாடமாக வைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். 
தினத்தந்தி பக்கம்