1 பிப்., 2015

மாணவர்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம்!

பிப்ரவரி 01,2015,10:32 ISTகோவை: மாணவர்களின் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக, குற்றம் புரியும் மாணவர்கள் அதிரடி நீக்கம், பஸ் படிக்கட்டில் பயணித்தால் இலவச பஸ் பாஸ் கட், ஹெல்ப் லைன் சேவை உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ளது.

சமீபகாலமாக கல்லூரி வளாகம் மற்றும் வெளிப்புறங்களில் கோஷ்டி மோதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதாக, புகார்கள் வருகின்றன. தவறான வழியில் செல்லும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில் கல்வித்துறை
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, குற்றங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடி நடவடிக்கை, இலவச பஸ் பாஸ் கட் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற, மாநிலத்திலுள்ள 41 அரசு, 34 அரசு உதவிபெறும், 417 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
* கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிதல், வருகை பதிவேடு பதிவுசெய்தல், நுழையும் வாகனங்களை சோதனை செய்தல் ஆகியன மேற்கொள்ள வேண்டும். வளாகம், மாணவர் விடுதிகளின் முக்கிய இடங்களில் போலீசாரின் ஆலோசனையுடன் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும்.
கண்காணிப்பு பறக்கும் படை
வளாக கண்காணிப்பு பறக்கும் படையில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இருவர் என, மொத்தம், ஐந்து முதல் ஆறு பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். இக்குழு, கல்லூரி மற்றும் மாணவர் விடுதியில் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.
ஹெல்ப் லைன் சேவை
மாணவர்கள் புகார்களுக்கென ஹெல்ப்லைன் ஒன்றை துவங்க வேண்டும். புகார் பெறுபவர் கல்லூரி முதல்வர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். பறக்கும் படை, முதல்வர், வார்டன் ஆகியோரின் மொபைல் எண்கள், அறிவிப்பு பலகையில் இடம்பெற வேண்டும்.
உளவியல் ஆலோசனை
மாணவர்களின் திறனை மேம்படுத்துதல், மன அழுத்தத்தை போக்குதல், தன்னம்பிக்கை உருவாக்கல், மன ரீதியான பிரச்னைகளை தீர்த்தல் ஆகியவற்றிற்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும்.
புகார்களும், தண்டனைகளும்
முதல் முறை சிறிய தவறு செய்யும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். தொடர் தவறுகள் செய்பவர்களின் அடையாள அட்டை மற்றும் இலவச பஸ் பாஸ் ரத்து செய்யப்படும். போலீஸ் வழக்கு பதிவுசெய்யும் விதமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கல்லூரியை விட்டு நீக்கப்படுவர். தொடர்புடைய பல்கலையின் பதிவாளர் வாயிலாக, மறுசேர்க்கை புரியாத வகையில், குற்றசெயலில் ஈடுபட்ட மாணவரின் விபரம் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
மேற்பார்வை குழு
கல்லூரி முதல்வர், போலீஸ் அதிகாரி, போக்குவரத்துக் கழக அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய மேற்பார்வை குழு வாராந்திர சந்திப்பு மூலம் கிடைக்கும் தகவல்களை, மாதம் ஒருமுறை அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். மாணவர்கள் மீது, முதல்வரின் நடவடிக்கை, வழக்கு பதிவு குறித்து தகவல்களை இக்குழு அனுப்பும்.
பஸ் பாஸ் கட்
கண்காணிப்பு குழு, போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோரிடம், பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் பிடிபட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் போக்குவரத்து விதிமுறையின்படி, இலவச பஸ் பாஸ் ரத்துசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பஸ் தின கொண்டாட்டத்திற்கு தடை, என்பன உள்ளிட்ட வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.