1 பிப்., 2015

பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் தினமும் நாளிதழ்!

ஜனவரி 31,2015,12:28 IST


   
சிவகங்கை: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தினமும் நாளிதழ் வாங்குவதன் அவசியம் குறித்து தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு பள்ளியிலும் காலையில் அன்றாட தமிழ் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் வாசிப்பு பின்பற்றப்படுகிறது. நூலகத்தில் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திட ஒவ்வொரு பள்ளிக்கும் உத்தரவு உள்ளது. பத்திரிகை வாங்குவதற்கென பள்ளி மானிய நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை செலவிடவும் அனுமதி உண்டு.
இந்நிலையில் காலையில் செய்தி வாசிப்பது பெரும்பாலான பள்ளிகளில் கடைபிடிப்பது இல்லை. கிராமப்புற பள்ளிகளைக் காரணம் காட்டி,சில தலைமை ஆசிரியர்கள் தங்களது வீடுகளில் காலையில் நாளிதழ்களை வாங்குவதோடு, அவற்றை பள்ளிக்கு எடுத்துச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "தலைமை ஆசிரியர்கள் விரும்பினால் பிற செலவினை குறைத்து நாளிதழ்களை வாங்கி, வாசிப்புத்திறனை மேம்படுத்தலாம். படிக்க,படிக்க தான் கிராமப்புற மாணவர்களுக்கு வாசிப்பு திறன் அதிகரிக்கும். 9ஆம் வகுப்பு மாணவருக்கு கூட, வாசிப்பு திறன் குறைபாடு இருப்பதை அறிய முடிகிறது. நாளிதழ் வாங்காத பள்ளிகள் வாங்க வலியுறுத்தப்படும்" என்றார்.
நன்றி -கல்விமலர்.காம்