19 பிப்., 2015

அறிவோம் நம் மொழியை: நீருயர மொழியுயரும்

சென்ற வாரம் நீர்நிலைகளின் வகைகளில் சிலவற்றைப் பார்த்தோம். இப்போது நீரின் இயக்கம், செயல் சார்ந்த வினைச் சொற்களைப் பார்க்கலாம். இவற்றில் சில சொற்கள் நீருக்கு மட்டு மல்லாமல் மற்ற திரவங்களுக்கும் திடப் பொருட்களுக்கும் பொருந்தும்.
நீரின் செயல்கள்
அமிழ்த்துதல் (சுழல் அவனை ஆழத்தில் அமிழ்த்தியது.), ஓடுதல் (இந்த ஆற்றில் ஆண்டு முழுவதும் நீர் ஓடும்.), ஊற்றெடுத்தல் (ஆற்றில் எங்கே தோண்டினாலும் நீர் ஊற்றெடுத்த காலம் ஒன்றுண்டு.), ஊறுதல் (கிணற்றில் நீர் ஊறவேயில்லை.), கசிதல் (நீர்த் தொட்டியின் விரிசலின் வழியே தண்ணீர் கசிந்திருந்தது.), கொட்டுதல் (குழந்தை தட்டிவிட்டதால் சொம்புத் தண்ணீர் கீழே கொட்டிவிட்டது.), கொதித்தல் (உச்சிவெயிலில் குளத்து நீர் வெந்நீர்போல் கொதித்தது.), சிந்துதல், (அவள் நடக்க நடக்கக் குடத்திலிருந்து நீர் சிந்திக்கொண்டே வந்தது.), சுரத்தல் (ஊற்றில் நீர் நன்றாகச் சுரந்தது.), சுழித்தோடுதல் (குடமுருட்டி ஆறு சுழித்தோடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.), சொட்டுதல் (அடிகுழாயிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.), ததும்புதல்/ தளும்புதல் ( நீர் ததும்பத் ததும்ப/ தளும்பத் தளும்பக் குடத்தைச் சுமந்துகொண்டு வந்தாள்.), தூறுதல் (மழை இப்போதுதான் தூற ஆரம்பித்திருக்கிறது.), தெறித்தல் (தலையில் விழுந்த அருவி நீர் நாலா பக்கமும் தெறித்தது.), நனைத்தல் (முழங்கால் வரை அலை நனைத்துவிட்டது.), பாய்தல் (வரப்பில் நீர் பாய்ந்தது), பெய்தல்/ பொழிதல் (மழை பொழிந்துகொண்டிருந்தது/ பெய்து கொண்டிருந்தது), பெருக்கெடுத்தல் (வெள்ளம் பெருக்கெடுத்தோடியது), பொங்குதல் (ஊற்றைத் தோண்டத் தோண்ட நீர் பொங்கியது), வழிதல் (குடத்தில் நிரம்பிய தண்ணீர் வழிய ஆரம்பித்தது), வற்றுதல் (குளத்தில் நீர் வற்றிவிட்டது.).
நீரைக் கொண்டு அல்லது நீரில் செய்யும் செயல்கள்
அமிழ்தல் (நிரம்பிய குடம் தவறி விழுந்து நீருக்குள் அமிழ்ந்தது), இறைத்தல் (கிணற்றில் நீரிறைத்துக் குளித்தான்.), ஊற்றுதல் (இந்தப் பாத்திரம் நிறையத் தண்ணீர் ஊற்று.), காய்ச்சுதல் ( நீரைக் காய்ச்சிக் குடி.), குடித்தல் (குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா!), குளித்தல் (ஆற்றில் ஓடிய முழங்கால் அளவு தண்ணீரிலும் ஆட்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள்.), கொட்டுதல் (குடத்தோடு தண்ணீரைக் கொட்டிவிட்டான்.), சிந்துதல் (தண்ணீரைச் சிந்தாமல் எடுத்துக்கொண்டு வா.), சேந்துதல் (தண்ணீர் சேந்தப் போனவளை இன்னமும் காணோம்.), தெளித்தல் (வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டாள்.), நீந்துதல் (யானைகள் நீந்தும் காட்சி!), பாய்ச்சுதல் (வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றான்.), முங்குதல் (ஆளரவம் கேட்டால் முக்குளிப்பான் பறவை நீருக்குள் முங்கிவிடும்.), மூழ்குதல் (வெள்ளத்தில் வயல்கள் முழ்கிவிட்டன.), மொள்ளுதல் (ஆற்றில் நீர் மொள்ளப் போனான்.).
வட்டாரச் சொல்லறிவோம்
தஞ்சை வட்டாரத்தில், ‘குதாப்பு’ என்ற ஒரு சொல் பயன்பாட்டில் இருக்கிறது. ‘அவன் குதாப்பு பண்ணலன்னா வேலைய எப்பயோ முடிச்சிருப்பன்’ என்றெல்லாம் சொல்வார்கள். இடையூறு, குழப்பம் ஏற்படுத்துதல் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல் அது. வையாபுரிப் பிள்ளை ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘தமிழ்ப் பேரகராதி’யில்கூட (தமிழ் லெக்சிகன்) இடம்பெறாத சொல் அது. அநேகமாக, உருது, பாரசீகம் போன்ற மொழிகளிலிருந்து வந்த சொல்லாகக்கூட இருக்கலாம். வாசகர்கள் இந்தச் சொல்லைப் பற்றிய மேல்விவரங்கள் அறிந்திருப்பின் எங் களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
சொல் தேடல்
சென்ற பகுதியில் ‘ஆன்ட்டி ஹிஸ்டமின்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘ஒவ்வாமை முறி’ என்ற சொல்லைப் பரிந்துரைத்திருந்தோம். ‘ஒவ்வாமை முறி’ என்ற சொல் ‘ஆன்ட்டி அலர்ஜிக்’ என்ற சொல்லுக்குத்தான் சரியாக இருக்கும் என்று டாக்டர் கு. கணேசன் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். ‘ஹிஸ்டமின்’ என்பது ஒரு வகை வேதிப்பொருள் என்பதால் அதைத் தமிழில் மொழிபெயர்க்கலாகாது என்றும் அதனால் ‘ஹிஸ்டமின் எதிர்மருந்து’, ‘ஹிஸ்டமின் தடுப்பான்’ ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் டாக்டர் கு. கணேசன் பரிந்துரைக்கிறார். இந்தச் சொற்கள் சில அகராதிகளில் இடம்பிடித்திருப்பதால் இவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்றும் டாக்டர் கு. கணேசன் சொல்கிறார்.
‘பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ்’ என்ற சொல்லுக்கான பொருள் என்ன என்பதைக் கடந்த பகுதியில் பார்த்தோம். அந்தச் சொல்லுக்கு இந்தியாவில் அரசியல்வாதிகளால் சற்றே சந்தர்ப்பவாத தொனி கிடைத்து விட்டதோ என்றே தோன்றுகிறது.
கோ. மன்றவாணன் பரிந்துரைகள்: ‘எளியோரை எதிர்த்தியங்காமை’, ‘எளி யோரை எதிர்க்காமை’.
எனது பரிந்துரை: ‘அரசியல்சார் பரிவு’.
அடுத்த வாரத்துக்கான கேள்வி: நமது மின்னஞ்சலில் ‘இன்பாக்ஸ்’ (inbox) என்றொரு பிரிவு இருக்கும். நமக்கு வரும் மின்னஞ்சல்கள் அந்தப் பகுதியில்தான் சேகரமாகும். அந்தச் சொல்லுக்குத் தமிழில் ‘உள்டப்பி’ என்றொரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். அது அப்பட்ட மான மொழிபெயர்ப்பாக இருக்கிறது. வேறு ஏதும் பொருத்தமான சொற்களை வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.