3 ஏப்., 2015

புதிய கல்வி முறை என்னும் பூதம்

புதிய கல்வி முறை என்னும் பூதம்

01 April 2015 01:45 AM IST
அறிவுத்திறனுக்கு ஊற்றுக்கண்ணாவது கல்வி. தற்போதைய நமது கல்வி முறையில் ஒரு மாணவன் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் என அய்ந்து பாடங்களைப் பயில வேண்டும்.
ஒவ்வொரு வகுப்பிலும் 5 பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும். ஐந்தில் ஒன்று பழுதானாலும் தேர்ச்சி பெறுதல் இயலாது. 11, 12 வகுப்புகளில் மொழிப்பாடங்கள் இரண்டு, பிற பாடங்கள் நான்கு என ஆறு பாடங்கள். ஆறு முகங்களில் ஒருமுகம் கோணினாலும் அவன் கல்லூரி முகத்தைக் காண வியலாது.
பட்டப்படிப்பிலும் மொழிப்பாடங்கள். மேலும் சில பாடங்கள். அவற்றுள் ஒன்று தவறினாலும் பட்டம் பெறும் லட்சியம் பட்டுப்போகும். மெட்ரிக், நவோதயா, மத்திய தேர்வாணையப் பள்ளி என எல்லாவற்றிலும் மொழிப்பாடங்கள் சில பிற பாடங்கள் சில அனைத்திலும் தேர்ச்சி கட்டாயம் என்பதில் மாற்றமில்லை.
முனைவர் மு.வ. ஒரு நூலில் மாணவர்களின் மொழிச் சுமை பற்றிக் கூறும்போது கணித மேதை இராமானுசம் கல்லூரி இடைநிலை வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறாத காரணத்தால் பட்டப்படிப்பில் சேரமாட்டாது துறைமுக அலுவலக எழுத்தர் பணியை ஏற்க நேர்ந்ததைச் சுட்டுகின்றார்.........

பின்னாளில் இராமானுசத்தின் கணிதப் புலமையை உலகம் ஒப்பியதெனினும் கணிதத் துறையில் மேதையான ஒருவர் மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெறாத காரணத்தால் கணிதப் பாடத்தில் மேற்படிப்பைத் தொடர மாட்டாத கொடுமையை நேர்மைப்படுத்த என்னவுண்டு?
ஆறாம் வகுப்பில் கணிதப் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவனை அடுத்த ஆண்டும் அதே வகுப்பில் இருத்துதலால் இணையும் கொடுமைகள் இரண்டாகின்றன. தேர்ச்சி பெற்ற பாடங்களில் மேற்படிப்பைத் தொடர மாட்டாது தடுத்தல் ஒரு கொடுமை. தேர்ச்சி பெற்ற பாடங்களை மீண்டும் ஓராண்டு படித்து மீண்டும் தேர்ச்சி பெறக் கட்டாயப்படுத்துதல் மற்றொரு கொடுமை.
பத்து பன்னிரண்டாம் வகுப்பிலும், பட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்ற பாடத்தை மீண்டும் படித்தல் தவிர்க்கப்படுகிறது. ஆனாலும் தோல்வியுற்ற பாடத்தை நிறைவு செய்தாலன்றி தேர்ச்சி பெற்ற பாடத்தில் மேற்படிப்பைத் தொடரமாட்டாத நிலை நீடிப்பது நன்னிலையல்ல.
முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ்ப்பாடத்தில் 90 விழுக்காடளவு மதிப்பெண் பெற்ற ஒருவன் தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பு பயில முற்றும் தகுதியானவனல்லவா? ஆனால் அவன் பன்னிரண்டாம் வகுப்பில் வேறொரு பாடத்தில் தேர்ச்சி பெறாததைக் காரணமாக்கி அவனுடைய தமிழ்ப் படிப்பைத் தடை செய்தல் விந்தையல்லவா?
அவ்வாறே தமிழ்ப்பாடத்தில் தேர்ச்சி பெற மாட்டாமையால் பன்னிரெண்டாம் வகுப்பு வரையும் கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்றிருந்தாலும் அதனில் மேற்படிப்பைத் தொடரமாட்டாது அவனது கணிதத்திறனை முடக்குதல் சமூக வளர்ச்சியை முடக்குவதல்லவா?
இளங்கலைப் பட்ட வகுப்பில் முதன்மைப் பாடத்தில் முழுத் தேர்ச்சி பெறும் ஒருவர் மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக தேர்ச்சி பெற்ற பாடத்தில் பட்டம் வழங்க மறுத்தல் சற்றும் ஏற்புடையதல்ல.
ஒவ்வொரு வகுப்பிலும் குறிப்பிட்ட பாடங்களை ஒரு தொகுப்பாக்கி அவையனைத்திலும் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த வகுப்பிற்குச் செல்லலாம் என்னும் முறையை முற்றாக ஒழிக்க வேண்டும்.
இதற்கேற்றவாறு பட்டப்படிப்பு வரையான கல்விப்பருவத்தை நான்கு அல்லது 5 பருவங்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு பருவத்திற்குமுரிய பாடத்திட்டம் மேற்சொன்ன நடைமுறைக்கேற்ப தாராளமான உள்பிரிவுப் பாடங்களாக அமைய வேண்டும்.
மருத்துவம், பொறியியல் உள்பட அனைத்துத் துறைப் பாடங்களும் கீழ் நிலையிலிருந்தே அவ்வப் பருவங்களுக்கேற்ப அமைய வேண்டும். மருத்துவம், பொறியியல் முதலியவற்றில் உயர்நிலைப்பயிற்சிக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரி, பொறியியற் கல்லூரி எனத் தனி அமைப்புகள் அமைய வேண்டும்.
இதன் மூலம் மருத்துவம், பொறியியல் உட்பட அனைத்துத் துறையறிவும் அனைத்து நிலையினர்க்கும் பரவலாகும். துறைப் பாடங்கள் ஏட்டறிவுடன் அமையாது நேரடிப் பயிற்சி பெறுதற்கேற்றவாறு கல்வி நிலையங்கள் உள்ளுர் மருத்துவமனைகள், தொழிலகங்கள், வணிக நிலையங்களுடன் இணைய வேண்டும்.
தேவையான அளவுக்குக் கல்வி நிலையங்களில் தொழிற்பட்டறைகள் அமைய வேண்டும். அதாவது கைத்தொழில், பொறியியல் தொழில், மருத்துவம் என அனைத்துப் பிரிவுகளும் அதனதன் தொழிலகங்களாக அமைய வேண்டும்.
இதன் மூலம் ஒவ்வொரு கல்வி நிலையமும் ஏட்டறிவுடன் சிறிய அளவில் பொருள்விளைவித்து விற்பனையாக்கும் தொழிலகமாகவும், வணிக நிலையமாகவும், தொழில் முகமைகளாகவும், எளிய மருத்துவ ஆலோசனை பெறுமிடங்களாகவும் அமையும்.
தற்போதைய முறைப்படியே, ஆனால் கொஞ்சம் வேறுபாடாக, ஒவ்வொரு பள்ளியிலும் அவ்வப்பகுதியின் சூழல், தேவை, நாட்டின் வளர்ச்சி ஆகிய மூன்றையும் ஒட்டிப் பல்வேறு பாடங்களுக்கும் பயிற்சிகளுக்கும் உரிய வசதிகள் அமையவேண்டும்.
ஆனாலும், அவற்றுள் எத்தனைப் பாடங்களைப் படிக்கலாம், என்னென்ன பாடங்களைப் படிக்கலாம் என முடிவு செய்ய வேண்டியவன் மாணவனே.
முதல் பருவத்தில் மட்டுமே மாணவர்களை ஒருங்கு கூட்டிவைத்து, அனைத்துத் துறைகளுக்கும் அடிப்படையாகும் செய்திகளை வகைப்படுத்திக் கற்பிக்கும் முறை தேவை. 5 வயது முடியும் வரையும் ஆடல், பாடல், ஓவியம், முதலியன வழியாக சொல்வளம் பெருக்குதல் மட்டுமே நடைபெற வேண்டும்.
5 வயது முடிந்த பின்னரே எழுதுதல், படித்தல் என்னும் பாடமுறையைத் தொடங்க வேண்டும். முதலிரு பருவங்களில் தாய்மொழிப் பயிற்சியும், விளையாட்டு முறையாகும் உடற்பயிற்சியும் கட்டாய பாடங்கள். இங்கே தாய்மொழி என்பது அந்தந்த மாநில மொழியே.
திடமான உடல் நலத்திற்கும், சீரான உடல் வளர்ச்சிக்கும் உடற்பயிற்சி கட்டாயத் தேவையாகிறது. பிற மொழிப் பயிற்சியைக் கண்டிப்பாக இரண்டாவது பருவத்தில்தான் தொடங்க வேண்டும்.
அதாவது, தாய்மொழியில் அடிப்படையான பயிற்சி பெற்ற பின்னரே பிறமொழியைத் தொடங்க வேண்டும். அதுவும் முதலில் வாய்மொழிப் பயிற்சியாகத் தொடங்கி இயல்பாகப் பேசப் பழகிய பின்னரே எழுத்துப் பயிற்சி தொடங்க வேண்டும். அன்றியும் பிற மொழி எதுவும் கட்டாயமாகக் கூடாது.
பிற மொழி என்பது கட்டாய விருப்பப் பாடமாக வேண்டுமெனின், ஏதேனுமொரு பிற மொழியே விருப்பப்பாடமாக வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பிற மொழிப் பயிற்சி வேண்டுவோர் கல்வி நிலையத்திற்கு வெளியில் தமது சொந்தப் பொறுப்பில் பெற்றுக் கொள்ளட்டும்.
அவ்வாறில்லையானால் கல்விக் கூடங்கள் மொழிகளின் சந்தைக் கூடங்களாகி வீண் குழப்பங்களுக்கு உள்ளாகும். இரண்டாவது அல்லது மூன்றாவது பருவத்தில் ஓவியம், இசை, நடனம், குறிப்பிட்ட விளையாட்டு என்பவற்றுள் ஏதேனும் ஒன்று கட்டாய விருப்பப் பாடமாதல் நல்லது.
மன இறுக்கத்தைத் தளர்த்தி மகிழ்வான உளநலத்திற்கு இம்முறை உதவியாகும்.
எதிர்காலம் குறித்து மாணவனின் ஆர்வத்தைக் கேட்டறிந்து வழிகாட்டும் கலந்தாய்வுக் குழுவொன்று ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் இயங்க வேண்டும்.
எல்லாப் பருவங்களிலும் எல்லாப் பாடங்களுக்கும் ஆண்டுத் தேர்வு உண்டு. அகமதிப்பீடு, புறமதிப்பீடு, செய்முறைப்பயிற்சி, நேரடிப்பயிற்சி, கள ஆய்வு, களப்பணி, சமூகப்பணி முதலியன அவ்வப் பாடத்திற்கும், அவ்வந்நிலைக்கும் ஏற்பக் கட்டாயமாகும்.
நூலகப் படிப்பு எழுத்து, பேச்சு வன்மை, படைப்பாற்றல், சமூகப்பணி என்றாற் போலவும் தனித்தனித் தேர்வுகளாக அமைய வேண்டும். இதன்வழிக் கல்வி நிலையமாவது குறிப்பிட்ட பாடங்களுக்கான ஏட்டறிவுக் கூடமாக மட்டுமில்லாது, பல்துறைப் பயிற்சிகளும் ஒல்லும் வகையளிக்கும் பல்திற நிலையமாகும்.
ஆனால், தேர்வு முடிவு இன்னவகுப்புக்கு என்றில்லாது, இன்ன பாடத்தில் இன்ன நிலையில் என அமையும். ஒவ்வொரு பாடத்திற்கும், ஒவ்வொரு நிலையிலும் தனித்தனிப் பட்டங்கள். இதன் விளைவாகப் பதினாறாண்டுகள் தொடர்ந்து படிக்கும் ஒருவர் தமிழில் பத்தாம் நிலைப்பட்டமும், கணிதத்தில் பதினான்காம் நிலைப்பட்டமும், வணிகவியலில் பதினாறாம் நிலைப்பட்டமும், பெற்றிருப்பார்.
மிகுதிறனுடையோர் ஒரே கட்டத்தில் பல பாடங்களைப் பயின்று பல பட்டங்களைப் பெறலாம். குறைதிறன் கொண்டோர் தமது திறனுக்கேற்ற பாடத்தில் இயலும் நிலைவரை படித்து அதற்கேற்ற பட்டம் பெறலாம். இவற்றுள் எந்தப் பட்டத்தின் அடிப்படையில் பணிவாய்ப்புக் கிடைத்தாலும் பெற்றுக் கொள்ளலாம்.
இறுதியாக நாம் வலியுறுத்தும் அடிப்படைகளாவன: கல்வி என்பதில் மாணவனின் விருப்பம், தேவை, திறன் என்பனவே முதன்மையாக வேண்டும்; பாடங்களைத் தேர்வு செய்யவும், ஆயத்தமாக உள்ள பாடங்களில் மட்டும் தேர்வு எழுதவும். விட்ட பாடத்தை மீண்டும் தொடரவும் மாணவனுக்கு முழு உரிமை; தேர்ச்சி பெற்ற - விரும்புகிற பாடங்களில் மேற்படிப்பைத் தொடர அனுமதித்தல்.
குறிப்பிட்ட பாடங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றால்தான் மேல் வகுப்பு எனக் கல்வி நிலையங்களில் நிபந்தனை விதிப்பதை விடுத்து, இன்ன வகையான பாடங்களில் இன்ன நிலைக்குரிய தேர்ச்சி பெற்றோர்க்கு இன்ன வேலை வாய்ப்பு என நிபந்தனையைப் பணியிடத்திற்கு மாற்றுதல்.
முடிவாக இன்னொன்றையும் வலியுறுத்துதல் தேவையாகின்றது. இந்தியா என்பது பல்வேறு மொழியினங்களையும், அவர்களுள் பல்வேறு சமயங்களையும் கொண்ட தனித்தன்மையான நாடாகிறது. இது நீண்ட நெடிய வரலாற்று விளைவு.
அவரவர் மொழி சமயநலன்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் வழியாகவே இந்தியா ஒரேநாடு என்பதை வலுப்படுத்த முடியும்.
மாறாக ஒரே மொழி, ஒரே மதம் என்றாக்கும் முயற்சி இந்தியா ஒரேநாடு என்பதைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பது உறுதியிலும் உறுதியாகும். மொழி வேறுபாடும், சமய வேறுபாடும் ஒற்றுமைக்குத்தடையாக மாட்டா என்பதற்கு இந்தியா சான்றாகிறது.
ஒரே மொழி, ஒரே சமயம் என்பன ஒற்றுமையாக மாட்டா என்பதற்கு அரபு நாடுகளும், தெலுங்கானாவும் சான்றாகின்றன. எனவே, புதிய கல்விக் கொள்கை என்பதில் இந்தியாவில் அனைத்து நிலைகளிலுமுள்ள மக்களின் மனித வளத்தை மேம்படுத்துதல் மட்டுமே நோக்கமாக வேண்டும்.
மாறாக, புதிய கல்விக் கொள்கை என்னும் பெயரில் ஒரே மொழி, ஒரே மதம் என்றாக்கும் முயற்சியின் விளைவு எதிர்மறையான விபரிதமாகவே முடியும். கிணறு வெட்டப்பூதம் கிளம்பிய கதையாகக் கூடாது, எச்சரிக்கை!