3 ஏப்., 2015

தமிழை மதித்த பிரதமர்! தேசத்தைச் செதுக்கிய சிற்பி லீ குவான் யூ

தமிழை மதித்த பிரதமர்!

இரா. செழியன்

26 March 2015 01:18 AM IST
லீ குவான் யூ 30 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை அவர் ஒரு மாபெரும் பொருளாதார, ஜனநாயக நாடாக மாற்றினார்.
சிங்கப்பூர் மக்கள் தொகையில் சீனர்கள் 77 விழுக்காடு, மலாய் இனத்தவர்கள் 14 விழுக்காடு, தமிழர்கள் 6 விழுக்காடு இருந்து வருகிறார்கள்.
ஆயினும், சிங்கப்பூர் ஆட்சிமொழிகளாக சீனம், மலாய், ஆங்கிலம் தமிழ் என்ற வகையில் பிரதமர் லீ குவான் யூ அரசமைப்புச் சட்டத்தை வகுத்தார்.
அண்ணாவை வரவேற்றவர், தமிழுக்கு மிகவும் மதிப்புத் தந்தவர் லீ குவான் யூ. அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

தேசத்தைச் செதுக்கிய சிற்பி

மலேசியாவுடனேயே சேர்ந்து வாழ்ந்துவிடுகிறோம் என்று அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரகுமானிடமும் துணைப் பிரதமர் அப்துல் ரசாக்கிடமும் லீ குவான் யூ மன்றாடிக் கேட்டுக் கொண்டும்,.......
வலுக்கட்டாயமாகச் சிங்கப்பூரைக் கத்தரித்துவிட்டார்கள் 1965-ஆம் ஆண்டு.
அந்தச் செய்தியை வானொலி வாயிலாகச் செவிமடுத்தார் பிரதமர் லீ. துக்கம் தொண்டையை அடைத்தது. அன்றைக்கு இரவு முழுவதும் அவர் தூங்கவே இல்லை. இந்சச் செய்தியைச் சிங்கப்பூர் மக்களுக்கு அறிவிக்கச் சென்ற லீ-க்கு 20 நிமிடம் பேசவே முடியவில்லை. என்றாலும், "தெரியாத இலக்கை நோக்கி, இல்லாத பாதையில், குழம்பிய மனத்துடன் எனது பயணத்தைத் தொடங்குகிறேன்' என ஒருவாறாகப் பேசி முடித்தார்.
"உலகத்திலேயே முதல் தரமான தலைவர்களில் முதலிடம் வகிப்பவர், லீ குவான் யூ' என்று அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்சனால் பாராட்டப்பட்ட அம்மாவீரன், ஒரு பண்டகசாலையின் காப்பாளருக்கு தலைமகனாக 16.09.1923-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார்.
தந்தை பொறுப்பற்றவர் என்றாலும், ஓர் அர்ப்பணிப்புள்ள தாய் கிடைத்ததால், கல்வியில் முதலிடத்தில் நிற்கமுடிந்தது லீ-யால். மாணவப் பருவத்தில் அசாத்தியமான ஆற்றல் உள்ளவராகத் திகழ்ந்தமையால், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வரை சென்று, சட்டப்படிப்பு படிக்க முடிந்தது அவரால்.
1941-ஆம் ஆண்டு ஜப்பானியர் சிங்கப்பூரின் மீது குண்டுமழை பொழிந்து, கந்தகப் பூமியைப் பற்றி எரியச் செய்தனர். அப்பொழுது அந்நாட்டை ஆண்ட ஆங்கிலேயர் உடனடியாகச் சரண் அடைந்தது.
எதேச்சாதிகாரத்தின் எல்லைக்கே சென்ற ஜப்பானியர்கள், 35 வயதுக்குள்பட்ட இளைஞர்களை எல்லாம் ஒரு மைதானத்தில் குவியச் செய்தனர். அவ்விளைஞர்களை வரிசையாக நிறுத்தி, அவர்கள் சட்டையில் "ஜியான்' என்று முத்திரை குத்தி (அவர்கள் மொழியில் சோதிக்கப்பட்டவர் எனப் பொருள்) கடற்கரையில் நிற்க வைத்து, கடற்கரையில் நிறுத்தப்பட்டவர்களைக் கடலை நோக்கி ஓடச் செய்து, பின்னாலிருந்து சுட்டுத் தள்ளுவர்.
அப்படிச் சோதிக்கப்பட்டவருள் ஒருவர் லீ. ஆனால், நிலைமையைப் புரிந்து கொண்டு, "என் சட்டையை எடுத்து வருகிறேன்' எனச் சொல்லி, அவர்களையும் ஏமாற்றி வந்தவர் தாம் லீ குவான்.
விடுதலை பெற்ற சிங்கப்பூரின் பிரதமராகப் பொறுப்பேற்ற லீ குவான், அனைத்து நாட்டுத் தொழில் முனைவோரையும் அழைத்துத் தம் நாட்டில் தொழிலையும் வாணிகத்தையும் தொடங்கச் சொல்லி, சிங்கப்பூரை உலகச் சந்தை ஆக்கினார்.
அதனால், உலகத்துத் துறைமுகங்களில் ஒப்பற்ற துறைமுகமாக சிங்கப்பூர் துறைமுகம் ஆகிற்று. ஐந்து நிமிடத்திற்கு ஒரு விமானம் புறப்படக் கூடிய சாங்கி விமான நிலையத்தை, உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கினார்.
வலுவான ராணுவத்தை உருவாக்க, சிங்கப்பூர் இளைஞர்கள் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சியில் பணியாற்றினால்தான், அரசுப் பணியில் சேரலாம் எனச் சட்டம் இயற்றினார். அவருடைய இரண்டு புதல்வர்களும் கட்டாய ராணுவப் பயிற்சி பெற்றவர்கள்.
இன்றைக்கு பிரதமராக இருக்கின்றவர், எட்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சி பெற்றார். இஸ்ரேலிலிருந்து முப்படையில் வல்லவர்களை அழைத்து வந்து பயிற்சி கொடுக்கச் செய்தார் லீ.
தனிமனிதச் சுதந்திரத்தைப் பேணிக் காக்க நினைத்தவர் சீனம் (மாண்ட்ரின்), மலாய், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளையும் அலுவல் மொழியாக்கினார். நாட்டில் பெருவாரியாக இருக்கும் சீன மக்கள், சீன மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
ஆனால், அந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் மலாய் மக்கள் என்பதால், ஒரு மொழியை ஆட்சிமொழியாக்க முடியாது என்றார் அவர். கேம்பிரிட்ஜில் படித்த காரணத்தால், பிரதமர் ஆங்கில மோகம் கொண்டவர் எனச் சொல்லி, மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களுக்குப் பாடம் புகட்ட, லீ தம்முடைய இரண்டு பிள்ளைகளையும் மாண்டிரின் பயிற்று மொழியாக இருக்கின்ற பள்ளிக்கூடங்களிலேயே சேர்த்துப் படிக்க வைத்தார். தம் மனைவியிடம் சொல்லி, அப்பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தைக் கற்பிக்கச் சொன்னார்.
இந்திய வம்சாவளியினர், இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். ஆனால், லீ சிங்கப்பூருக்குத் தொன்றுதொட்டு நெருக்கமானவர்கள் தமிழர்களே எனச் சொல்லி, தமிழை ஆட்சி மொழியாக்கினார்.
லீ குவானின் இந்த ஞானம் தான், "லீ குவான் யூ தலைவர்களுக்குள் ஒரு தனிப் பிறவி. ஆசியாவுக்கே சமாதானத்தைக் கொடுத்த ஒரு தனித் தலைவர்' என நிக்சனின் இரண்டாவது மூளையாக இருந்த டாக்டர் ஹென்றி கிஸிஞ்சரைப் பாராட்ட வைத்தது போலும்.
தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க ரீ சைக்கிளிங் வாட்டர் (பயன்படுத்திய நீரையே சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தல்) முறைமையை லீ கொண்டு வந்தார். இத்திட்டத்தைப் பலரும் தொடக்கத்தில் பரிகசித்தனர்.
தர்மம் முதலில் போதிப்பவனின் வீட்டு வாசலில் இருந்து புறப்பட வேண்டும் என்பதால், அவருடைய வீட்டிலேயே ரீ சைக்கிளிங் தண்ணீரைப் பயன்படுத்தினார். அவர் வீட்டிலேயே அது பயன்படுத்தப்படுகிறது என்பதை நாட்டு மக்களுக்குக் காட்டுவதற்காக, வீடு முழுமையும் விளக்குகளைப் போட்டுப் பலரையும் பார்வையிட அனுமதித்தார் (லீ குவான் என்ற பெயருக்கே விளக்கும் வெளிச்சமும் என்று சீன மொழியில் பொருள்). இன்றைக்கும் சிங்கப்பூரில் அனைவரும் பயன்படுத்துவது, இந்த முறைதான்.
உலகத்திலேயே ஊழல் ஒழிந்த நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருப்பது சிங்கப்பூர். அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் லீ. அரசு ஊழியர்களுக்குப் போதிய வருவாய் இல்லாமை தான், லஞ்சத்திற்குக் காரணம் என அறிந்தார். எனவே, பெருநிறுவனங்களுக்கு நிகராக ஊதியம் வழங்கினார்.
அவர் பதவியேற்ற 1965-இல் சிங்கப்பூரில் தனி நபருடைய ஆண்டு வருமானம் 400 யு.எஸ். டாலர். 2005-இல் தனி நபருடைய ஆண்டு வருமானம் 30,000 டாலர். அமெரிக்காவோடு பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கின்ற நாடு சிங்கப்பூர். லஞ்ச ஒழிப்புத் துறையைப் பிரதமரின் நேரடி நிர்வாகத்தில் கொண்டு வந்தார். லஞ்சம் வாங்குபவருக்கு 10,000 டாலர் அபராதம் என்பதோடு, அவருடைய சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
லீ அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த வீ டுன் பன் 1975-ஆம் ஆண்டு வீடுகள் கட்டி விற்கும் விற்பனையாளரிடம் கையூட்டுப் பெற்றுக் குடும்பத்துடன் இந்தோனேசியா சென்று வந்தார். அத்துடன் ஒரு மாளிகையும் 30 லட்சம் டாலரும் கையூட்டாகப் பெற்றார். அமைச்சர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டு அமைச்சருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது. இந்த அமைச்சர் பிரதமர் லீயின் நெருக்கமான நண்பர். பிரதமர் லீயுடன் 1950- இல் இருந்து தொழிற்சங்கத்தில் பணியாற்றியவர்.
1981-ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த தே சியாங் வான் நில விவகாரத்தில் நான்கு லட்சம் டாலர் லஞ்சமாகப் பெற்றார். அவருடைய குற்றம் வெட்ட வெளிச்சமானவுடன், பிரதமருக்கு மடல் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவரும் பிரதமரின் நெருங்கிய நண்பரே.
இப்படியொரு தலைவனை மானுடம் என்று காணும் இனி? ஊழலை அறிவியல் முறையில் ஒழித்தவர் லீ குவான். இப்படிப்பட்ட தலைவரின் மறைவு, இந்திய தேசத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.
30 ஆண்டுகளுக்கு மேலாகப் பதவி வகித்த லீ பிரதமரான பிறகு, 1970-இல் தம் சொந்த நாடாகிய சீனாவிற்குச் சென்றார். அவரை வரவேற்ற அந்த நாட்டின் பிரதமர் ஹனுவா குவா பெங், மேக்ஸ்வெல் எழுதிய Indian’s China war என்ற புத்தகத்தைப் பரிசளித்தார். மேக்ஸ்வெல் அப்புத்தகத்தில், இந்தியாவே சீனாவை ஆக்கிரமித்தது என்றும், அதற்குப் நேருவும் ஏ.மு. கிருஷ்ண மேனனும் பொறுப்பாளிகள் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அந்நூலை ஏற்கெனவே படித்துவிட்ட லீ அதனைப் பிரதமரிடமே திருப்பிக் கொடுத்து, "இது இந்திய - சீனப் போர் குறித்த உங்கள் கதை. இதை எனக்குப் பரிசளித்து ஒரு பிரதியை வீணாக்க வேண்டாம். இதன் மறுபக்கமுள்ள இந்தியத் தரப்பு எனக்கு நன்றாகவே தெரியும்' என்று மறுதலித்தார்.
இத்தகைய மனிதருக்கு பிரிட்டிஷ் பிரதமராகிய மார்க்கரெட் தாட்சர் வழங்கிய பட்டயம் மிகவும் பொருத்தமானதாகும். "நானும் என்னுடைய பிரதம அறையிலிருந்து லீ குவானினுடைய பேச்சுகளையும், செயல்களையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். ஒரு விழுக்காடுகூட சறுக்கல் இல்லாத மனிதராக இருக்கிறாரே என வியக்கின்றேன்' என்பது தான் அப்பட்டயம்.
காலம் சில நேரங்களில் சில சிற்பிகளைச் செதுக்கும். தேசம் சில நேரங்களில் சில சிற்பிகளைச் செதுக்கும். ஆனால், லீ குவான் யூ ஒரு தேசத்தையே செதுக்கிய சிற்பி ஆவார்!

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).