3 ஏப்., 2015

தாய்மொழி வழி கல்வி கர்நாடகத்தில் சட்டமானது: மொழி தீவிரம் காட்டும் தமிழகத்தின் நிலை என்ன?

தாய்மொழி வழி கல்வி கர்நாடகத்தில் சட்டமானது: மொழி தீவிரம் காட்டும் தமிழகத்தின் நிலை என்ன?  
03.04.2015ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி கன்னடம் தான் பயிற்று மொழி; 10ஆம் வகுப்பு வரை, கன்னடம் கட்டாய மொழிப் பாடம் என்ற, சட்ட திருத்தத்தை, கர்நாடகா அரசு நிறைவேற்றியுள்ளது
 தீவிரமான மொழிக் கொள்கையை கொண்டுள்ளதாக, மார் தட்டும் தமிழகத்தில், தாய்மொழி தமிழும் தெரியாத, ஆங்கிலமும் புரியாத ஒரு தலைமுறை உருவாகி விட்டது. இதற்கு என்ன காரணம், அடிப்படைக் கல்வியைக் கூட, தமிழில் கற்றுத் தர முடியாத அவலம் இங்கு நீடிப்பது ஏன் என்பது குறித்து, கல்வியாளர்கள், முன்னாள் அமைச்சர், தமிழ்மொழி உரிமை கோருபவர்களின் கருத்துக்கள்:
பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு: ..........
கர்நாடகா மாநிலம் உதயமான நாளில், மொழிக்காக பாடுபட்டவர்களுக்கு 'ராஜ உற்சவ்' என்ற விருதை, கர்நாடகா அரசு அளிக்கிறது. இவ்விருதைப் பெறுபவர் தான், அந்த ஆண்டின், கர்நாடக மொழி மாநாட்டின் தலைவராகவும் இருப்பார். நடப்பு ஆண்டின், 'ராஜ உற்சவ்' விருது, தேவனூர் மகாதேவா என்ற எழுத்தாளருக்கு, கர்நாடகா அரசு அறிவித்தது. 'கன்னட மொழியில், கல்வி கற்றுத் தராத அரசிடமிருந்து விருது வாங்க தயாராக இல்லை' என, 'ராஜ உற்சவ்' விருதை, மகாதேவா புறக்கணித்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகா அரசு, கன்னட மொழியில் மட்டுமே, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்றுத் தரப்படும்; 10ம் வகுப்பு வரை, கன்னடம் கட்டாய மொழிப் பாடம் என, குழந்தைகள் கல்வி உரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. தமிழக எழுத்தாளர்களுக்கு இதுபோன்ற தைரியம் இருக்கிறதா என, தெரியவில்லை. அப்படி இருந்தாலும், அரசு அதை ஏற்குமா என்பதும் கேள்விக்குறி. சென்னை மாகாணம் இருக்கும்போது, 'தொடக்க கல்வி சட்டம் 1920' நிறைவேற்றப்பட்டது. இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, தாய் மொழியான தமிழில் தான் கல்வி கற்றுத் தரவேண்டும். இதற்கான விதிகள், 1924ல் கொண்டு வரப்பட்டன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், தாய்மொழி வழிக் கல்வி தான் வலியுறுத்தப்படுகிறது. தற்போதுள்ள கல்வி உரிமைச் சட்டத்தின், 29 (எம்) பிரிவு, கூடுமான வரை தாய்மொழி வழி கல்வியை தான் முன்னிறுத்துகிறது. 'கூடுமான வரை' என்பதன் அர்த்தம், ஒரு மொழிக்கு கற்றுத்தர, அடிப்படை கூறுகளான எழுத்து வடிவம் போன்றவை, இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. தேசிய கல்விச் சட்டமும், தாய்மொழிக் கல்வியைத் தான் வலியுறுத்துகிறது. இந்நிலையில், ஒன்றாம் வகுப்பிலிருந்து, தாய்மொழி வழி இல்லாத, கல்வியை போதிப்பது, சட்ட விரோதமானது. தமிழக அரசு, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப, கற்றல் மொழியை பின்பற்றுகிறது.
முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு: தொடக்கப் பள்ளிகளில், தமிழ் வழியில் கற்றுத் தரவேண்டும் என, 1996 - 2001 தி.மு.க., ஆட்சியில், அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்றளவும் நிலுவையில் உள்ளது. இதன்பின், 2006 - 2011 தி.மு.க., ஆட்சியில், தமிழை கட்டாயம் கற்க வேண்டும் என, சட்டம் கொண்டு வந்தோம். அதுவும், ஒன்றாம் வகுப்பில் இருந்து, படிப்படியாக அமல் செய்தோம். இச்சட்டத்தை எதிர்த்து, தமிழகத்தில் உள்ள மொழி சிறுபான்மையினர் வழக்கு தொடர்ந்தனர். நல்லவேளையாக, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், 'கற்றல் மொழியை அரசு கட்டாயப்படுத்தக் கூடாது. கற்றல் மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கே உண்டு' என, உத்தரவிட்டது. இந்நிலையில், கர்நாடகா அரசு கொண்டு வந்துள்ள சட்டம், எந்தளவுக்கு அமல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. ஆனால், தாய்மொழியில் கற்க வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில், ஒரு அரசு கொண்டு வரும், மொழி உள்ளிட்ட, மாநிலத்தின் பொது கொள்கைகளை, அடுத்து வரும் அரசும், பின்பற்ற வேண்டும். அப்போது தான், அந்த கொள்கையை தொடர்ந்து அமல்படுத்த முடியும். கர்நாடகா அரசு கொண்டு வந்துள்ள, குழந்தைகள் உரிமை திருத்த சட்டத்தை, நிறைவேற்ற முடியுமா என்பதை, தமிழக அரசும் ஆராய வேண்டும்.

தமிழ் மொழி உரிமை கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர், ஆழி செந்தில்நாதன்: உலக நாடுகள் எங்கு சென்றாலும், அடிப்படைக் கல்வியை, தாய்மொழியிலும், உயர் கல்வியை ஆங்கிலத்திலும், கற்றுத் தரும், நியதி தான் உள்ளது. ஆனால், தமிழகத்தை, நீண்ட காலமாக ஆட்சி செய்யும், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள், இந்த நியதியை பின்பற்ற, உளமாற விரும்பவில்லை. தமிழ் மொழியை கற்பிக்கும் மொழியாக்க வேண்டும் என, இக்கட்சிகள், சில நேரங்களில் முயற்சிப்பதாக தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதற்காக, தமிழ் அறிஞர்கள் கருத்தை எல்லாம் கேட்பர். ஆனால், நடைமுறைக்கு வரவில்லை. இதற்குக் காரணம், தனியார் பள்ளிகளை நடத்துபவர்கள் பெரும்பாலும், இந்த இரு கட்சியைச் சேர்ந்தவர்களாகவோ, ஆதரவாளர்களாகவோ இருக்கின்றனர். அதனால், அவர்கள் என்ன விரும்புகின்றனரோ, அதைச் செய்து, தமிழையும், தமிழக குழந்தைகளையும், பலி கொடுக்கின்றனர். கன்னடத்தை, அடிப்படைக் கல்வியின், பயிற்று மொழியாக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது காங்கிரஸ். இதற்கு, எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளனர். இந்த ஒற்றுமை தமிழகத்தில் இல்லை. இதனால், தமிழ் வழிக் கல்வியை இங்கு கொண்டு வர முடியவில்லை.
கல்வியாளர், மாலதி: கல்வி, அரசிடம் இருக்கும் வரை, பயிற்று மொழி குறித்த சிக்கல் எழவில்லை. கல்வித் துறையில், தனியார் எப்போது அனுமதிக்கப்பட்டனரோ, அப்போது இருந்து கல்வியில் அரசியல் புகுந்து விட்டது. மக்களுக்காக கல்விக் கொள்கையை வகுக்காமல், தனியாருக்காக கல்விக் கொள்கையை வகுத்து வருகின்றனர். கடந்த, 25 ஆண்டுகளில் தான், இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. தாய்மொழியும் தெரியாத, ஆங்கிலமும் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கி விட்டோம். குறிப்பாக, பொறியியல் மோகம், அதைப் பெற மதிப்பெண் கட்டாயம் என்ற பந்தயத்தில் சிக்கி, தமிழக மாணவர்கள் தவிக்கின்றனர். இதை மாற்ற வேண்டும். துவக்கக் கல்வியை தாய்மொழியில் அளிக்கும், நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் - 
நன்றி தினமலர்