6 ஜன., 2015

பள்ளிப் பாடத்திட்டத்திலேயே தமிழ் இசைப் பாடங்களைச் சேர்க்க கோரிக்கை

பள்ளிப் பாடத்திட்டத்திலேயே தமிழ் இசைப் பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும் என, தமிழ் இசைச் சங்கத்தில் நடந்த விழாவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழ் இசைச் சங்கத்தின், பண் ஆராய்ச்சியின் 65ஆவது கூட்டம், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் திருமலை துவக்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில், சங்கத் தலைவரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான பு.ரா.கோகுலகிருஷ்ணன், சங்கச் செயலர் .சி.முத்தையா, சீர்காழி சிவசிதம்பரம், .கே.சி.நடராசன், சம்பந்தம், மீனாட்சி சித்தரஞ்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஓதுவார் பரம்பரை இல்லையென்றால், தமிழ் இசை காணாமல் போயிருக்கும். தமிழ் இசையில் பட்டம் பெற்றாலும், இசை விழாக்களில், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கை விட தமிழில் அதிகம் பேர் பாடுவதில்லை. தமிழ் இசையை வளர்க்க இளைஞர்கள் மத்தியில் ஆர்வமும், உணர்வும் பெருக வேண்டும். சென்னையில் திருவையாறு மட்டுமல்லாமல், சென்னையில் சீர்காழி இசை நிகழ்ச்சி மூலமும், தமிழ் இசை பரப்பப்பட வேண்டும். தமிழ் இசையை வளர்க்க, பள்ளிகளிலேயே தமிழ் இசையைக் கற்பிக்க வேண்டும். அதற்கான அருமையான பாடல்கள், சிந்தனைகள் அனைத்தும், நாலடியார், அவ்வையார் மற்றும் திருக்குறளில் ஏராளமாக உள்ளன என்று வரவேற்புரை நிகழ்த்திய பு.ரா.கோகுலகிருஷ்ணன் பேசினார்.

தமிழ் இசை தனித்து நிற்கவில்லை. அது வாழ்க்கையோடு இணைந்து உள்ளது. பல்வேறு நிலப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்த இசை, பண், யாழினை பயன்படுத்தியுள்ளனர். அதை நாம் மறந்து விட்டோம். ஆனால் இன்று, தொலைக்காட்சியில் வரும் விளம்பரத்தின் பின்னணி இசையைக் கேட்டு, குழந்தைகள் குதுாகலிக்கின்றன. தமிழ் இசையை மீட்க, இசையோடு இலக்கியத்தையும் இணைக்க வேண்டும். காலத்திற்கேற்ப, இரண்டு ஆண்டுகளிலேயே, பாடத்திட்டங்களில் போதிய மாற்றம் செய்யப்பட வேண்டும். பள்ளிப் பாடத்திலேயே தமிழ் இசையின் அடிப்படையைப் புகுத்த வேண்டும். கனடா நாட்டில் தமிழ் இசையைப் பயில, ஆர்வம் கொண்டு பலர் என்னிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால் பல்கலைக்கழகச் சட்டம் அதற்கு இடம் தராததால், அதற்கான முயற்சி, கடிதப் போக்குவரத்து வாயிலாக நடைபெற்று வருகிறது என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருமலை பேசினார்.