திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், வரும் மார்ச் மாதம், 41,473 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, மாவட்டம் முழுவதும், 102 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், பொன்னேரி, திருவள்ளூர்
என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவ்விரண்டு, கல்வி மாவட்டங்களிலும், அரசு, நகராட்சி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என, 298 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவ்விரண்டு, கல்வி மாவட்டங்களிலும், அரசு, நகராட்சி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என, 298 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
மார்ச் மாதம் தேர்வு:
இந்த பள்ளிகளில், மாணவ, மாணவியர் என, 41,473 பேர் படிக்கின்றனர். இவர்கள் அனைவரும், வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அரசு பொதுத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, பொன்னேரி கல்வி மாவட்டத்தில், 56, திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் 46 என, மொத்தம், 102 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வினாத்தாள் மையங்கள், 16 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டு பொதுத் தேர்வில், 19,571 மாணவர்கள், 20,580 மாணவியர் என, 40,151 பேர் தேர்வு எழுதினர். இதில், 89.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, கூடுதலாக, 1,322 பேர் தேர்வு எழுத உள்ளனர். கடந்த ஆண்டு, தேர்வு மையத்தை கண்காணிக்க, 2,050 உதவி கண்காணிப்பாளர்கள், நியமிக்கப்பட்டிருந்தனர். முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், 75 பேர் கொண்ட பறக்கும் படையும், நியமனம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டும், இதே போல், பறக்கும் படையினரும், தேர்வு அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
100 சதவீதம்...:
இதுகுறித்து பெயர் கூற விரும்பாத மாவட்ட கல்வி அலுவலக அலுவலர் ஒருவர் கூறியதாவது: நடப்பாண்டு, பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரம் அனைத்தும், கணினி மூலம் பதிவு செய்து, கல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுத உள்ளவர்கள் மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை, மாற்றம் இருந்தாலோ அல்லது அதிகப்படுத்தினாலோ அதன் விவரத்தை, கல்வி துறை அறிவிக்கும்.
பிப்ரவரி முதல் வாரத்திற்குள், இறுதி விவரம் தெரிய வரும். இந்த பட்டியலில் தனித்தேர்வர்கள் விவரம் சேர்க்கப்படவில்லை. தனித்தேர்வர்கள் மற்றும் அவர்களுக்கான தேர்வு மையங்களின் விவரங்களையும், கல்வி துறை அறிவிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.