1 பிப்., 2015

அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க அரசு பள்ளி மாணவியர் இருவர் தேர்வு

ஜனவரி 31,2015,12:13 IST


திருத்தணி: தேசிய அளவில், வரும் பிப்., 28ஆம் தேதி மும்பையில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் இருவர், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தயனா, 10ம் வகுப்பு படிக்கும் மாணவி சோனியா ஆகிய இருவரும், கடந்த மாதம் திருவள்ளூர் கல்வி மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று, முதல் இடத்தை பிடித்தனர். தொடர்ந்து, கடந்த, ஜன., 15ஆம் தேதி சென்னையில் நடந்த அறிவியல் கண்காட்சியில், 30 மாவட்டங்களில் இருந்து, 600 மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும், ஐந்தாம் இடத்தை பிடித்தனர்.
தொடர்ந்து, கடந்த ஜன., 20ஆம் தேதி கேரளாவில் நடந்த அறிவியல் கண்காட்சியில், ஏழு மாநிலங்களில் இருந்து, 600 பள்ளி மாணவியர் கலந்து கொண்டனர். இதில் திருத்தணி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர், இரண்டாம் இடத்தை பிடித்து, தேசிய அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
வரும், பிப்., 28ஆம் தேதி மும்பை நகரில், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க உள்ள மாணவியர், மும்பை செல்வதற்கான செலவுத் தொகையாக, 10 ஆயிரம் ரூபாயை, அரக்கோணம் தொகுதி எம்.பி., திருத்தணி அரி, வழங்கி மாணவியரை பாராட்டினார்.