20 பிப்., 2015

பொதுத்தேர்வை நேர்மையாக நடத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்த தேர்வுத்துறை

சென்னை: பிளஸ் 2 தேர்வில், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், சம்பந்தப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு முடியும் வரை, பள்ளி வளாகங்களில் இருக்கக்கூடாது; அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும்.............
உத்தரவிடப்பட்டுள்ளது.
முறைகேடு புகார்கள்
பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் மார்ச் 5 - 31 வரை நடக்கிறது. இந்தமுறை, தேர்வில் கடுகளவு கூட முறைகேடு புகார்கள் வராமல், வெளிப்படையான, கட்டுப்பாடுகள் கொண்ட தேர்வாக நடத்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, பல்வேறு புகார்களுக்கு உள்ளான தனியார் பள்ளிகளிலுள்ள தேர்வு மையங்களில், கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக சேலம், நாமக்கல், சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு, மிகவும் கண்டிப்பான ஆசிரியர்களை, அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளாக, தேர்வுத் துறை நியமித்துள்ளது.
அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் ஆகியோர் எந்தக் காரணத்தைக் கொண்டும், தனியார் பள்ளி அலுவலர்கள் மற்றும் தொடர்புள்ளவர்களுடன் நேரிலோ, மொபைல் போன்களிலோ, வேறு நபர்கள் மூலமோ தொடர்பு கொள்ளக்கூடாது. கான்பரன்ஸ் கால், வாட்ஸ் அப் போன்ற எந்தவகை தொடர்பும், தனியார் பள்ளியினருடன் தேர்வு முடியும்வரை வைத்துக் கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வுகள் நடக்கும் நேரங்களில், தேர்வு மையங்கள் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி அலுவலர்கள், உரிமையாளர்கள், காவலாளிகள் என யாரும் நுழையக் கூடாது. தனிப்படை, பறக்கும் படை அதிகாரிகள் வந்தால், அவர்களை நுழைவாயிலில் காக்க வைத்து, உள்ளே தகவல் சொல்லி விட்டு, கேட்டை திறக்கக் கூடாது.
உடனடியாக, நுழைவாயிலைத் திறந்து விட வேண்டும். நுழைவாயிலை திறந்து மூடும் பொறுப்பு, பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸ் வசமே இருக்க வேண்டும் என்றும், தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
புகார்கள் வந்தால், தேர்வு மையங்களில் பணியாற்றிய கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள், போலீசாரின் மொபைல் போன் எண்களின் போன் அழைப்புப் பட்டியலை ஆய்வுசெய்ய வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டு உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 20,2015,10:46 IST